கேரள ஆளுநரை தடுத்த எம்எல்ஏக்கள்... " GO BACK GOVERNOR" என்று முற்றுகையிட்டு முழக்கம்...!
கேரளாவில், ஆண்டின் முதல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற வந்த ஆளுநரை தடுத்து, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கேரள சட்டப்பேரவையில், நிகழாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆரீஃப் முகமது கான் (Arif Mohammad Khan) உரையுடன் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஆளுநரை, சட்டப்பேரவை வளாகத்தில் வரவேற்ற முதலமைச்சர் பினராயி விஜயன், பின்னர் அவரை, பேரவைக்குள் அழைத்து வந்தார். அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி, ஆளுநரை உள்ளே விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அவைக் காவலர்களின் பாதுகாப்புடன், ஆளுநர் ஆரிஃப் முகமது கானை, முதலமைச்சர் பினராயி விஜயன் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்று, சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார். தனது உரையின்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வாசகங்களை படிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிய ஆளுநருக்கு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், சபாநாயகர் இருக்கை முன் திரண்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், பாதகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பியதால், அவையில் அமளி நிலவியது...
இதனைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்ட எம்எல்ஏக்கள், சபை காவலர்களால், கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் உரையை, ஆளுநர் ஆரிஃப் கான் வாசித்தார்.
Comments